செய்யாறு அடுத்த அனக்காவூரில் 5 வயது சிறுமிக்கு டெங்கு பாதிப்பு

செய்யாறு, செப்.19: செய்யாறு அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, சிறுமி வசிக்கும் கிராமத்தில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டது. செய்யாறு அடுத்த அனக்காவூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(30), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் சாருலதா(5). இவர் அருகில் உள்ள அரசு துவக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமி வசிக்கும் அனக்காவூர் கிராமத்தில் நேற்று கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நேற்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர். அப்போது, ஒவ்வொரு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகள், கிணறுகளில் லார்வா புழுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்தனர். மேலும், பயன்பாடின்றி வைத்திருந்த டயர்கள், உடைந்த பானைகள், தேங்காய் சிறட்டைகளை அப்புறப்படுத்தி, கொசுமருந்து அடித்து ஒட்டுமொத்த சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories: