விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தடைமீறி தந்தி சட்ட நகல் எரித்த பெண்கள் உட்பட 85 பேர் கைது

திருவண்ணாமலை, செப்.19: விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 85 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். ஆனாலும், இத்திட்டத்தை அதிகாரிகள் கைவிட மறுத்து, தொடர்ந்து உயர் மின் கோபுரங்களை அமைக்கின்றனர்.

இந்நிலையில், இத்திட்டத்தை கைவிட வேண்டும், விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி சாலையோரங்களில் புதை வழித்தடத்தில் மின் கம்பிகளை கொண்டுசெல்ல வேண்டும், ஏற்கனவே அமைக்கப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாத வாடகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மின் கோபுரங்கள் அமைக்கப்படும் மாவட்டங்களில் 10 இடங்களில் நேற்று போராட்டம் நடந்தது.

அதன்படி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று போராட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர் சுப்பிரமணி, துணைத் தலைவர் பலராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது, உயர்மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் 1865ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தந்தி சட்டம் இருப்பதால், விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென இந்திய தந்தி சட்ட நகலை எரித்தனர். அதனால், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும், போலீஸ் தடையை மீறி, இந்திய தந்தி சட்ட நகலை விவசாயிகள் எரித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 85 பேரை கைது செய்தனர். கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இந்த போராட்டத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதையொட்டி, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Stories: