கருணாநிதி சிலை வைக்க போலீஸ் தடை?

திருத்தணி, செப். 19: திருத்தணி செங்குந்தர் நகர் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க போலீசார் தடை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும் திமுகவினருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி - சித்தூர் சாலையில், செங்குந்தர் நகர் பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் காலியாக உள்ள இடத்தில் அதிமுக சார்பில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை அமைப்பதற்கு அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதே பகுதியில் திமுக நகர செயலாளர் பூபதி தலைமையில், திமுக பிரமுகர் சாம்ராஜ் என்பவரது இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்காக நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம் மூலம்  நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த திருத்தணி போலீசார், இந்த இடத்தில் கருணாநிதியின் சிலை வைக்கக்கூடாது. அதற்காக நிலத்தை சீரமைக்கக்கூடாது என தடை விதித்தனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் நகர செயலாளர் பூபதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் விரைந்து வந்தனர். இதனால் அங்கு இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதட்டம் நிலவியது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு நகராட்சி அனுமதியின்றி நிலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இதுகுறித்து திமுக பிரமுகர் சாம்ராஜ்  கூறுகையில், “நாங்கள் சுத்தம் செய்த பகுதியை நான் கிரயம் பெற்றுள்ளேன். மேலும், இதே சர்வே எண்ணில் உள்ள நிலத்தில் அதிமுகவினர் சிலை வைக்க அனைத்து துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர். ஆனால், நாங்கள் திமுகவினர் என்பதால், ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின்பேரில், நாங்கள் நிலத்தை சீரமைப்பதை அதிகாரிகள் அடாவடியாக தடுத்து நிறுத்துகின்றனர். மேலும், இப்பகுதியில் கருணாநிதி சிலை வைக்க யாரும் ஆட்சேபிக்கவில்லை.

எனினும், அதிமுகவினரின் சிலை வைக்கும் பகுதியில் பல்வேறு ஆட்சேபனை இருந்தும் அதிகாரிகள் முறைகேடாக அனுமதி அளித்துள்ளனர். இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என வேதனையுடன் கூறினார்.

Related Stories: