தண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் கொலை கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குத்திக்கொன்றேன்

தண்டராம்பட்டு, செப்.18: தண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குத்திக் கொலை செய்தேன் என போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(40), லாரி டிரைவர். இவருக்கு பானுபிரியா(32) என்ற மனைவியும், சஞ்சய்(8) என்ற மகனும், தர்ஷினி(6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேசன் நேற்று முன்தினம் காலை அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், எஸ்பி சிபிசக்கரவர்த்தி, வெங்கடேசனின் மனைவி பானுபிரியா உட்பட உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, பானுபிரியாவின் தங்கை செல்வேஸ்வரியின் கணவரான ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் என்பவரை போலீசார் நேற்று காலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம், ராமச்சந்திரன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி பானுபிரியாவின் தாயார் புஷ்பாவுக்கும், வெங்கடேசனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், மாமியார் புஷ்பாவை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதை தட்டிக்கேட்டதால் எனக்கும், வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் எனக்கும், பானுபிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த வெங்கடேசன், பானுபிரியாவை கண்டித்தார். இருப்பினும் எங்களுக்கு இடையே கள்ளக்காதல் நீடித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பானுபிரியா, வெங்கடேசனை பிரிந்து அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வெங்கடேசன், பானுபிரியா வீட்டிற்கு சென்று கள்ளக்காதலை கைவிடக்கோரி தகராறு செய்தார். மேலும் பானுபிரியாவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்து பானுபிரியா, என்னிடம் கூறி அழுதார். இதனால் ஆத்திரமடைந்த நான், வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதன்படி கடந்த 15ம் தேதி மாலை வெங்கடேசனிடம் சென்று, மது அருந்தலாம் வா என கூறி கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்து சென்றேன். அங்கு மது குடித்து கொண்டிருந்தபோது மீண்டும் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நான், அருகில் இருந்த கல்லை எடுத்து வெங்கடேசனின் தலையில் குத்தினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் தீராததால் அவரை கல்லால் சரமாரி குத்தி கொலை செய்தேன். இவ்வாறு ராமச்சந்திரன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: