கட்டிங் மெஷினில் கை துண்டான பெண்ணுக்கு இழப்பீடு இழுத்தடிப்பு

விருதுநகர், செப். 17: விருதுநகர் அருகே, பெரிய பேராலியை சேர்ந்த மணி மனைவி கருப்பாயி (37) கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பேராலியில் சீனிவாசன் என்பவருக்கு, சொந்தமான மூலிகை விற்பனை நிறுவனம் உள்ளது. இங்கு நித்திய கல்யாணி செடிகளை கட்டிங் செய்து விற்கின்றனர். இந்த நிறுவனத்தில் கடந்த 2013ல் பணியாற்றினேன். கடந்த 2013 மே 29ல் வேலை செய்தபோது, கட்டிங் மெஷினில் வலது கை சிக்கி இரண்டு துண்டானது. இது தொடர்பாக, பணியாளர் இழப்பீடு ஆணையர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் 2017 ஏப்ரல் 25ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘தொழிற்சாலை நிர்வாகம் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை. பணியாளருக்கு ரூ.5,73,446ஐ 12 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என தெரிவித்தது.

கடந்த 2018 ஜூலை 23ல் மாவட்ட கலெக்டர், ‘விருதுநகர் தாசில்தார் பெரிய பேராலியில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து தொகையை வசூலித்து மதுரை தொழிலாளர் துணை ஆணையத்தில் செலுத்த உத்தரவிட்டார். ஆனால் கையை இழந்த எனக்கு பணியாளர் இழப்பீடு ஆணையர் நீதிமன்றம் உத்தரவிட்டு 2.5 ஆண்டுகளாகியும் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: