சமன்பாட்டு ஊக்க நிதி 1 ஆண்டாக இல்லை பேரூராட்சிகளில் சம்பளம் போட முடியாமல் தவிப்பு

உத்தமபாளையம், செப்.17: தேனிமாவட்ட பேரூராட்சிகளில் சமன்பாட்டு ஊக்க நிதி 1 வருடமாக தமிழக அரசு ஒதுக்காததால் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன். சிறிய பேரூராட்சிகளில் சம்பளம் போட முடியாமத நிலை ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கோம்பை, மார்க்கையன்கோட்டை, குச்சனூர் உள்ளிட்ட  22 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் கிரேடு அடிப்படையில் மக்கள் தொகை குறைவாக உள்ள டவுன் பஞ்சாயத்துக்களில் ஆண்டு வருமானம் என்பது மிக குறைவாகவே இருக்கும். இதனைக் கொண்டு அடிப்படை கட்டமைப்புகள், சம்பளம், வளர்ச்சி திட்டப்பணிகளை செய்வது கடினம். எனவே, தமிழக அரசு 3 மாதத்திற்கு ஒரு முறை மக்கள் தொகை அடிப்படையில் சமன்பாட்டு ஊக்க நிதியை வழங்குகிறது. இதில் பேரூராட்சிகளில் பணியாற்றுபவர்களின் சம்பளம், கரண்ட் பில், குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது.

மறுபுறம் ஏதேனும் அடிப்படை வசதிகள் செய்திட பணிகள் நடைபெற்றால் இந்த நிதியை எடுத்து பயன்படுத்தி கொள்வர். பெரும்பாலும் செயல் அலுவலர்கள் சமன்பாட்டு ஊக்க நிதியை தங்களது ஊழியர்களின் சம்பளத்திற்கு பயன்படுத்தி கொள்வர். வருமானம் அதிகம் உள்ள டவுன் பஞ்சாயத்துக்களில் அப்படி செய்யமாட்டார்கள். அனைத்து அடிப்படை பணிகளுக்கும் சேர்த்து பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே, 3 மாதத்திற்கு ஒரு முறை இந்த நிதி என்பது மிக முக்கியமானதாக உள்ளது.

ஆனால், கடந்த 1 வருடமாகவே அனைத்து டவுன் பஞ்சாயத்துக்களுக்கும் நிதி வரவில்லை. இதனால் பல்வேறு நிதி நெருக்கடியில் நிர்வாகங்கள் தவிக்கின்றன. மறுபுறம் அடிப்படை வசதிகள் கூட செய்தாலும் உரிய செலவினங்கள் செய்ய முடியாத நிலையில் சிறிய டவுன் பஞ்சாயத்துக்கள் தள்ளாடுகின்றன. எனவே, உடனடியாக இதனை ஒதுக்கிட தமிழக அரசு முன் வரவேண்டும். இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், ``சிறிய டவுன் பஞ்சாயத்துக்களாக உள்ளவற்றில் மாதந்தோறும் சம்பளம் போடுவதே பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக துப்புரவு தொழிலாளர்கள்  திண்டாடுகின்றனர். காரணம் கேட்டால் நிதி இருப்பு இல்லை என கைவிரிக்கின்றனர். அடிப்படை வசதிகளாக உள்ள குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு போன்றவை கவனிக்கப்படாமல் உள்ளது. இதனை சரிசெய்யக்கூட நிர்வாகங்கள் தயக்கம் காட்டுகின்றன. எனவே, சமன்பாட்டு ஊக்க நிதியை ஒதுக்கிட தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்’’ என்றனர்

Related Stories: