தண்ணீர் இல்லாததால் வாழை விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள்

தேவாரம், செப்.17: தேவாரம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிவதால் வாழை விவசாயத்தை விவசாயிகள் கைவிட்டனர்.தேவாரம், லெட்சுமிநாயக்கன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.ரெங்கநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் அதிக ஏக்கர் பரப்பில் வாழை விவசாயம் நடைபெற்று வந்தது. இதற்காகவே 100அடி முதல் 200 அடிவரை தோட்டத்து கிணறுகள் உள்ளன. வடகிழக்கு, தென்மேற்கு, கோடை மழை பெய்யும்போது தோட்ட கிணறுகளில் அதிகமான தண்ணீர் ஊற்றெடுக்கும். 18ம் கால்வாயில் தண்ணீர்திறக்கப்படும்போது இங்குள்ள கண்மாய், குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து நிற்கும்.இதனால் நிலத்தடிநீர்மட்டம் உயரும்போது வாழை விவசாயம் செய்யப்பட்டது. ஆனால், தற்போதோ மழை பெய்யும் அளவு குறைந்து வருகிறது.  இதனால் தோட்ட கிணறுகளில் தண்ணீர் வற்றுவது தொடங்கிவிட்டது. இதனால் வாழை விவசாயம் அடியோடு சரிந்து வருகிறது. கடந்த காலங்களில் சுமார் 100 ஏக்கர் வரையிலும் செய்யப்பட்ட விவசாயம் இப்போது 20 ஏக்கருக்கும் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. விவசாயிகள் வங்களில் வாங்கிய கடனை அடைக்க முடியாதநிலையில் உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ``தேவாரம் மழை சார்ந்த விவசாயத்தை அதிகமாக கொண்டுள்ளது. பருவமழை தவறிவிட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழைக்கு தண்ணீர் இல்லை. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. 20சதவீதம் வரையே தற்போது பயிரிடப்பட்டுள்ளது. அதற்கும் தோட்டக் கிணறுகளில் தண்ணீர் இல்லை’’ என்றனர்.

Related Stories: