பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை பெண்ணை கடத்திச் சென்று சொத்தை பதிந்த 3 பேருக்கு சிறை

தேவகோட்டை, செப். 17: பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடர்பாக பெண்ணை கடத்திச் சென்று சொத்தை பதிந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் ஆரோக்கிசாமி மனைவி பவுல் அல்போன்ஸா(42). இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பலபேரிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 10ம் தேதி செவ்வாய்கிழமை தேவகோட்டை ஞானானந்தகிரி நகரில் வளர்மதி என்பவரின் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது பவுலின்அல்போன்ஸா சில நபர்களால் கடத்தப்பட்டார். சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில், கல்லல் இந்திராநகரை சேர்ந்த ஜெயபாலுவிற்கு பவுலின் அல்போன்ஸா பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால் தன்னுடன் காரைக்குடி மன்னர் நகரைச் சேர்ந்த லெட்சுமணன்(54), கல்லல் இந்திரா நகரைச் சேர்ந்த அப்துல்கலாம்(22) ஆகியோர் மூலம் கடத்தினார். பின்னர் பவுலின் அல்போன்ஸாவிற்கு சொந்தமான காரைக்குடியில் உள்ள சொத்தினை எழுதி வாங்கி காரைக்குடி பத்திர அலுவலகத்தில் பதிந்தனர். இதனை அறிந்த தேவகோட்டை போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். தேவகோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று பேரும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: