இ-சேவை மையம் மூலம் 15 வகையான சான்றிதழ்

சிவகங்கை, செப். 17: சிவகங்கை மாவட்டத்தில் மின் மாவட்ட திட்டம் மூலம் இ.சேவை மையங்களில் 15 வகையான சான்றிதழ்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்துறை மூலம் வழங்கப்படும் வருமானம், சாதி, இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களும், சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதிஉதவித் திட்டங்களும் மற்றும் இணையவழி பட்டா மாறுதல்களும் மின் மாவட்ட திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் ஆணைப்படி, மேலும் 15 வருவாய்த்துறை சான்றிதழ்கள் மின் மாவட்ட திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

வாரிசு சான்று, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு பிடிப்போர் உரிமம், பணம் கொடுப்போர் உரிமம், பள்ளிக்கல்வி சான்றிதழ்கள் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தையின்மை என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமணச் சான்றிதழ், குடும்ப இடப்பெயற்சி சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், விவசாய வருமான சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ் ஆகியன இத்திட்டத்தின் மூலம வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து இ.சேவை மையங்களிலும் இந்த சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அரசு பொது இ.சேவை மையங்களில் தேவையான சான்றிதழ்களை பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: