கல்லூரி மாணவர் கொலை வழக்கில் நேற்று 4 பேர் கைது

திருப்புவனம், செப். 17: முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் புதைத்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்புவனம் தேரடி சித்திய தெருவில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவரின் மகன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அஜித்குமார்(19). இவரை முன் விரோதத்தில் கடந்த 4ம் தேதி கொலை செய்து வைகை ஆற்றில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 11 நாட்களுக்கு பிறகு கடந்த 14ம் தேதி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் எஸ்ஐக்கள் மாரிகண்ணன், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டது.

அவர்கள் இந்த கொலை தொடர்பாக திவாகர் என்பவரை ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திவாகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொலையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கடந்த இரண்டு நாட்களாக வலை வீசி தேடிவந்தனர்.

கடந்த ஆண்டு கொத்தங்குளம் முனியாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அஜீத்குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள், முனியாண்டியின் உறவினர்கள், நண்பர்களை ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அப்போது கொலை சம்பவத்தில் தொடர்புடைய கொத்தங்குளம் பொன்னுமுத்து மகன் அய்யனார் (21), திருப்புவனம் புதூரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் தினேஷ்குமார் என்ற மண்ட (20), முருகேசன் மகன் அஜய் என்ற லூஸ் அஜய் (21), சேதுபதி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட மேலும் நான்கு பேரை தனிப்படை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

இந்நிலையில், அஜீத்குமார் கொலை வழக்கில் தேடப்பட்ட திருப்புவனத்தை சேர்ந்த அருண்குமார்(22), மணிரத்னம்(25) ஆகிய இருவர் நேற்று மதுரை ேஜஎம் 6 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Related Stories: