ஆதரவற்றவர்களை பராமரிக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் மனு

திருச்சி, செப்.17: திருச்சி மாநகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களை மீட்டு சமூகநலத்துறை மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதம் சமூகபணி அமைப்பை சேர்ந்த லால்குடி லில்லி சர்மிளா அளித்த மனுவில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு ஆதரவற்றோர் உள்ளனர். சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும். அவர்களை விட்டுச்செல்லும் அவர்களது உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளார்.

சோமரசம்பேட்டை, சிறுவயலூரை சேர்ந்த பிரியா அளித்த மனுவில், ‘திருச்சி மாநகராட்சியில் தாயார் சத்திரம், கோணார்சத்திரம், வாசன்நகர் ஆகிய பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை. குப்பைகளை வாங்கிச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். துறையூர் மதுராபுரி நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் சங்க தலைவர் துரை அளித்த மனுவில், ‘துறையூர் மதுராபுரி ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியில் 17 பேருக்கு கடந்த 1976ம் ஆண்டு முசிறி தாலுகா திண்ணனூர் கிராமத்தில் 47 சென்ட் நிலம் பிரித்து வழங்கப்பட்டது. இதில் ஒருவருக்கு மட்டும் பட்டா வழங்கி உள்ளனர். மீதமுள்ள 16 பேருக்கு பட்டா வழங்கப்படவில்லை. 16 பேருக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: