பாசன வாய்க்கால் தண்ணீர் தெருக்களில் புகுந்தது பொதுமக்கள் அவதி

தொட்டியம், செப்.17: தொட்டியம் தாலுகா மணமேடு அருகே கோடியாம்பாளையம் கிராமத்தில் தெருக்களில் பாசன வாய்க்கால் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமும், அவதியுமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டிம் தாலுகா மணமேடு அருகே கோடியாம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வடகரை வாய்க்கால் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த வாய்க்காலில் காவிரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.  வாய்க்காலில் ஆங்காங்கே குப்பைகள் தேங்குவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு கோடியாம்பாளையம் கிராமத்தில் தெருக்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமம்அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தீபா என்பவர் கூறும்போது, வாய்க்காலில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் தெருக்களில் புகுந்துள்ளது. இதனால் குழந்தைகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரில் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதால் அச்சமாக உள்ளது. தொடர்ந்து தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதித்து தொற்றுநோய் பரவும் முன்பாக தெருக்களில் புகுந்த தண்ணீரை வெளியேற்றி மீண்டும் காவிரி நீர் உட்புகாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

Related Stories: