தரையை தட்டியது மின்கம்பிகள் மின்தடையால் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் அவதி

முசிறி, செப்.17: முசிறி அருகே பாலப்பட்டி மேற்கு கொட்டம் பகுதியில் மழையால் சாய்ந்த மின்கம்பங்களிலிருந்து தரையை தட்டிய மின்கம்பிகளால் 3 நாட்களாக மின் தடை ஏற்பட்டது. இதனால் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர். முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சிக்குட்பட்ட பாலப்பட்டி மேற்கு கொட்டம் கிராமத்தில் கடந்த 3 தினங்களாக மின்சாரம் இல்லாமல் அப்பகுதியில் வசிப்போர் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். உடனடியாக மின்சாரம் வழங்கிட மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முசிறி தாலுகா திருத்தியமலை ஊராட்சிக்கு உட்பட்ட பாலப்பட்டி மேற்கு கொட்டம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. சாலையின் ஓரத்திற்கு அருகே இருந்த மண்ணை பொக்லின் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து தார் சாலைக்கு அணைவாக போடப்பட்டது.

சமீபத்தில் பெய்த மழையினால் குழிகளில் தண்ணீர் நின்ற காரணத்தினால் அங்கிருந்த மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் கம்பிகள் தரையில் உரசி உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மின்மாற்றியின் சுவிட்சை ஆப் செய்து வைத்துள்ளனர். இது குறித்து மின்வாரிய துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரியத்தினர். சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று 3 நாட்கள் கடந்த நிலையில் இன்னும் மின்கம்பம் சரிசெய்யப்படாமல் உள்ளது. பொதுமக்கள் சில மின் கம்பங்களை கயிறுகட்டி இழுத்து மரத்தில் கட்டி உள்ளனர். மின்தடை காரணமாக மாணவ, மாணவிகள் காலாண்டு தேர்வுக்கு படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக மின்கம்பங்களை சரி செய்து மின்சாரம் வழங்கிட வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: