எஸ்பி அலுவலகத்தில் ரிப்பேருக்கு வைத்திருந்த 11 வயர்லெஸ்களை திருடி விற்ற 2 பேர் கைது

திருச்சி, செப்.17: திருச்சி எஸ்.பி.அலுவலகத்தில் ரிப்பேருக்கு வைத்திருந்த 11 வயர்லெஸ்களை திருடி விற்ற துப்புரவு தொழிலாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தின் கீழே தரைத்தளத்தில் ஒரு அறையில் போலீசார் பயன்படுத்தி பழுதான விஎச்எப் ஸ்டாடிக் செட் எனப்படும் வயர்லெஸ் மற்றும் வாக்கி டாக்கிகள் வைக்கப்பட்டுள்ளது. பழுதான இந்த வயர்லெஸ் மற்றும் வாக்கி டாக்கிகள் சென்னைக்கு அனுப்பி சர்வீஸ் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். இதன்படி அந்த அறையில் பழுதான 44 ஸ்டாடிக் செட் பாக்ஸ்கள் சென்னைக்கு அனுப்புவதற்காக அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 11 வயர்லெஸ்களை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மாயமான வயர்லெஸ் பாக்ஸ் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எஸ்பி அலுவலகத்தில் துப்புரவு பணி செய்து வரும் ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இவரது மகன் சீனிவாசன் (35) எஸ்பி அலுவலகத்தில் துப்புரவு பணி செய்து வருகிறார்.

இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. எனவே சந்தேகத்தின்பேரில் சீனிவாசனிடம் நடத்திய விசாரணையில் தினமும் மது குடிப்பதற்காக வாக்கிடாக்கிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் பாக்ஸ்களை எடுத்து சென்று, அதனுள் இருக்கும் செம்பு காயில்களை உடைத்து எடுத்து பழைய இரும்பு கடையில் விற்று அந்த பணத்தில் மது அருந்தியது தெரியவந்தது.இதுகுறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவில் எஸ்ஐ மணிமேகலை புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து வயர்லெஸ் பாக்ஸ்களை திருடிய சீனிவாசன் மற்றும் சுப்ரமணியபுரம் புரபஷசர் காலனியில் பழைய இரும்புகடை வைத்துள்ள கனகராஜ் (50) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: