கத்தார் நாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்ற நாமக்கல் பெண்ணை பட்டினி போட்டு சித்ரவதை

நாமக்கல், செப்.17: வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி, அவரது கணவன், உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.  குமாரபாளையம் தாலுகா கொக்கராயன்பேட்டையில் வசிப்பவர் செந்தில்குமார்(41). ெடய்லரான இவரது மனைவி கவிதா(37). இவர்களது 3 மகன்களும், கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், மகன்களின் படிப்பு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், கடந்த 6ம் தேதி, புரோக்கர்கள் மூலமாக கவிதா கத்தார் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக அனுப்பப்பட்டார். ஆனால், அங்கு அவரை யாரும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, தன்னை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும்படி, கவிதா புரோக்கர்களிடம் கேட்டுள்ளார். அப்போது, ₹80 ஆயிரம் கொடுத்தால் தான், வீட்டுக்கு அனுப்புவோம் என்று புரோக்கர்கள் கூறியுள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா, தனது உறவினர்களுக்கு செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், தனக்கு உணவு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

இதனையறிந்த புரோக்கர்கள், அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கவிதாவிடம் இருந்து மேற்கொண்டு எந்த தகவலும் வராததால், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து, அவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று கலெக்டர் ஆசியாமரியத்தை குடும்பத்திருடன் நேரில் சந்தித்து செந்தில்குமார் மனு கொடுத்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

 இதேபோல், அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் ராமசாமி மற்றும் அப்பகுதி மக்கள், கலெக்டர் ஆசியாமரியத்திடம் கொடுத்த மனு விபரம்: நாமக்கல் மாவட்டத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, பல முறை நாங்கள் மனு கொடுத்துள்ளோம். இது தொடர்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தி உள்ளோம். ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடைத்தரகர்கள் சிலர் பணத்தை வாங்கி கொண்டு, தகுதியற்ற நபர்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை பெற்று தருகின்றனர். இதனால், தகுதியுடையவர்களுக்கு பட்டா கிடைப்பதில்லை. எனவே, மாவட்டத்தில் உள்ள வீடற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு, இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லை அடுத்த கன்னியாங்காடு பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு: கன்னியங்காடு கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். கூலித்தொழிலாளர்களான இவர்கள், தங்கள் கிராமத்திற்கு செல்ல கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலையையே பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாயத்தில் தீர்மானம் போடப்பட்டு தார் சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தார் சாலை அமைக்கும் நிலத்தில் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் என்று சிலர் கூறி, சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விட்டனர். எனவே, அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: