ஓராண்டு கடந்தும் மாணவருக்கு 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு

ராசிபுரம், செப்.17: நாமக்கல் அருகே, திருத்தம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழை ஓராண்டாகியும் வழங்காததால், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற ர.ஹரிஸ் என்ற மாணவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இவருக்கான மதிப்பெண் சான்றிதழ், 2018 ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கு வந்தது. ஆனால், ர.ஹரிஷ் என்பதற்கு பதிலாக ரா.ஹரிஷ் என இனிஷியல் தவறுதலாக இருந்தது. இதனையடுத்து, சான்றிதழில் திருத்தம் கோரி, பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்குனரகத்துக்கு, மதிப்பெண் சான்றிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் மாணவரின் மதிப்பெண் சான்றிதழ், சம்பந்தப்பட்ட பள்ளிக்கோ, அவரது பெற்றோருக்கோ கிடைக்கவில்லை.

 இதனையடுத்து, அவரது பெற்றோர், பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்குனரகம் ஆகிய இடங்களில் மனு அளித்தும், நேரில் முறையிட்டும் இதுவரை சான்றிதழ் கிடைக்கவில்லை. ஓராண்டு கடந்தும் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காததால், மாணவரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கல்வி தொடர்வதிலும் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருத்தம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழை தாமதமின்றி வழங்க, பள்ளி கல்வித்துறைக்கும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தை நாட மாணவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: