செங்கல்பட்டு மக்கள் பரிதாபம் மின் இணைப்பு கொடுக்காததால் காட்சி பொருளான போக்குவரத்து சிக்னல்: 10 ஆண்டுகளாக காத்திருக்கும் கம்பங்கள்

செங்கல்பட்டு, செப். 17: செங்கல்பட்டில் போக்குவரத்து சிக்னல் கம்பத்துக்கு, மின் இணைப்பு கொடுக்காததால் அந்த கம்பங்கள் துருப்பிடித்து வீணாகி கொண்டிருக்கிறது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியான செங்கல்பட்டு நகரில் பழமையான ரயில் நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி உள்பட பல்வேறு முக்கிய கல்வி நிலையங்கள், சப் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகரட்சி அலுவலகம் உள்பட  அரசு அலுவலகங்களும், பெரிய காய்கரி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அரசு பஸ்கள் செங்கல்பட்டு பஸ் நிலையம் வந்து செல்கின்றன. இதனால், செங்கல்பட்டு நகரம் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாவதால் பரபரப்பாக காணப்

படும்.

இதையொட்டி நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனை ஏற்று, மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டு புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் ராட்டின கிணறு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சிக்னலுக்காக கம்பங்கள் அமைக்கப்பட்டன.

ஆனால் அதற்கு தேவையான மின் இணைப்பு கொடுக்காததால், இதுவரை சிக்னல் இயக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வந்த புயல் காரணமாக சிக்னல் கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. அதன்பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை.

சிக்னல் இல்லாததால் வாகனங்கள் போக்குவரத்து விதியை மீறி சாலையில் செல்கின்றன. இதனால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசாரும், சட்ட ஒழுங்கு போலீசாரும் கடும் சிரமம் அடைகின்றனர்.

சிக்னல் அமைத்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை, போலீசார் ஏன் செயல்படுத்தாமல் உள்ளனர் என கேள்வி எழுந்துள்ளது. செங்கல்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேலாவது போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: