வனத்துறையினர் ஆட்சேபணை இல்லாத சான்றிதழ் அளித்து திருப்போரூர் - செங்காடு சாலை சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர் பார்ப்பு c

திருப்போரூர், செப்.17: வனத்துறையினர், ஆட்சேபணை இல்லாத சான்றிதழ் அளித்து, திருப்போரூர் - செங்காடு சாலைக்கு தடை விலகுமா என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

திருப்போரூர் ஒன்றியம் இள்ளலூர் ஊராட்சி செங்காடு கிராமத்தையொட்டி திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய மேட்டுக்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த 2 கிராமங்களுக்கும் திருப்போரூரில் இருந்து செல்லும் சாலையின் இடையே வனப்பகுதி உள்ளது.

இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. திருப்போரூர் வனப்பகுதியில் மான், முயல், முள்ளம்பன்றி உள்பட பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் உள்ளதால், வனத்துறையின் ஆட்சேபணை இல்லாத சான்றிதழ் பெற்ற பிறகே, இந்தத சாலையை போட முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், இந்த சாலை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இள்ளலூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்காடு கிராமம் வரை உள்ள இந்த சாலை, கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையின்போது பலத்த சேதமடைந்தது. இதனால் செங்காடு, மேட்டுக் குப்பம் கிராமங்களில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலைக்கு வருவதற்கு அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் விளைவிக்கப்படும் வேளாண் பொருட்களை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எடுத்து செல்ல இச்சாலையே முக்கிய வழியாக உள்ளது. இதையொட்டி, இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, மாவட்ட கலெக்டர், திருப்போரூர் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைத் துறையிடம் மனு அளித்தனர்.

ஆனால் வனத்துறையின் தடையை காரணம் காட்டி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையை போடாமல் உள்ளனர். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள இந்த சாலையை அமைக்க, வனத்துறையினர் ஆட்சேபணை இல்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: