மாநில நெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் கிடப்பில் கிடக்கும் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை: வாகன ஓட்டிகள் சிரமம்

மதுராந்தகம், செப்.17: அச்சிறுப்பாக்கத்தில், மாநில நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால், ரயில்வே மேம்பால இணைப்பு சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் இருந்து பெருங்கருணை, பெரிய கயப்பாக்கம், பெரிய களக்காடி ஆகிய முக்கிய கிராமங்கள் வழியாக சூனாம்பேடு மற்றும் பாண்டிச்சேரி நோக்கி செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்த சாலையின் குறுக்கே அச்சிறுப்பாக்கத்தில், சென்னை - திருச்சி ரயில் பாதை செல்கிறது. இதே பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான போக்குவரத்து வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் வெயில், மழை காலங்களில் சாலையின் இரு பக்கமும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதையெட்டி, பொதுமக்கள் வசதிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாநில நெடுஞ்சாலை துறையினர், ரயில்வே மேம்பாலத்துக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலையினை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இந்த சாலை அமைக்கப்பட்டால் பயணிகள் ரயில்வே கிராசிங்கில் நிற்காமல் மேம்பால சாலை வழியாக பயணம் மேற்கொண்டு விரைவாக செல்ல முடியும். அப்போது, ரயில்வே கிராசிங்கில் நிற்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தமிழக மாநில நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையை அமைக்கும் பணியினை இதுவரையிலும் முன்னெடுக்காமல் விட்டுள்ளனர்.

இதனால், இந்த சாலை வழியாக பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ரயில்வே கேட் திறக்கப்பட்ட பிறகு பயணம் செய்யும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்க தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: