திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டலத்துக்கு 26ல் தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி, செப். 17: பொள்ளாச்சி பி.ஏ.பி., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டல பாசனத்துக்கு வரும் 26ம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, 4மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையால், பொள்ளாச்சியை அடுத்த கான்டூர் கால்வாயில் ஏற்பட்ட மண் சரிவால், சர்க்கார்பதியிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு தாமதமானது.மேலும் கான்டூர் கால்வாயில் விழுந்த பாறைகள் மற்றும் மண்ணை கடந்த மாதம் இறுதியில் அகற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 6ம் தேதி முதல் தூணக்கடவு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சர்க்கார்பதி வழியாக, கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சென்றடைந்தது. கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு வினாடிக்கு சுமார் 800கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மாலை பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தில் 4ம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பான, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு, கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தின்போது, திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டல பாசனத்துக்கு வரும் 26ம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி விட்டு மொத்தம் 70நாட்களில் 4சுற்று தண்ணீர் திறக்கப்படும் எனவும். இதன் மூலம் சுமார் 96ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது: ‘கான்டூர் கால்வாயில், மழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள உடைப்புகளை கண்டறிந்து உடனே சீரமைக்க, போதிய நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். தூணக்கடவிலிருந்து சர்க்கார்பதி வரை சேதமான பகுதிகளை, முழுமையாக சீரமைக்க வேண்டும். 4 மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பின்போது, முறைகேடாக தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவில் வரும் 25ம் தேதி நடைபெறும், இரு மாநில நீர் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில், பி.ஏ.பி., விவசாயிகளையும் அழைத்து செல்ல வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில் ‘‘விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை ஒரு மனுவாக எழுதி என்னிடம் கொடுத்தால், நான் முதல்வரை நேரில் சந்தித்து கான்டூர் கால்வாயில் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய உரிய நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

Related Stories: