தமிழகத்தில் பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் தற்கொலை தடுப்பு, போதை மீட்பு திட்டம் முடக்கம்

கோவை, செப்.17: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தற்கொலையில் இருந்தும், போதை பழக்கத்தில் இருந்தும் பாதுகாக்கும் திட்டம் முடங்கி கிடக்கிறது. தமிழகத்தில் தற்கொலை சாவு அதிகரித்து வருகிறது. மொத்த தற்கொலையில் 13 முதல் 18 வயது வரையுள்ள மாணவ மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் ஆசிரியர்களின் டார்ச்சர் காரணமாகவும் மாணவ மாணவிகள் சிலர் தற்கொலை செய்துள்ளனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் சிலர் தங்களது குடும்பத்தில் நிலவும் சூழல், பள்ளிக்கூட சூழல், வெளி இடங்களில் தங்களை பாதிக்கும் வகையிலான பல விஷயங்களை வெளியே சொல்ல முடியாமல் மனதில் வைத்து புலம்பி வருகின்றனர். பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களாலும், மனதை பாதிக்கும் நிகழ்வில் இருந்து மீளமுடியாமலும் அவர்கள் தற்கொலை முடிவிற்கு தள்ளப்படுவதாக தெரிகிறது. மாணவர்களின் தற்கொலை இறப்பை தடுக்க, கண்காணிக்க மாநில அளவில் அனைத்து உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 2 ஆண்டிற்கு முன் தற்கொலை தடுப்பு திட்டம் சமூக நலத்துறை சார்பில் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக மன உளைச்சலில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை கண்டறிந்து கவுன்சலிங் அளித்து சகஜ நிலைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மாநில அளவில் இந்த திட்டம் பெயரளவிற்கு கூட செயல்படவில்லை. பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி நிர்வாகங்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பது கூட தெரியாது. மாநில அளவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கவுன்சலிங் தர இலக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஏப்ரல் வரை மாணவ மாணவிகளுக்கு கவுன்சலிங் வழங்கவில்ைல. தற்கொலை மன நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு எப்படி கவுன்சலிங் தருவது என ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கவில்லை.

 தற்கொலை மீட்பு திட்டத்திற்கு சமூக நலத்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட ெதாகை 15.04 லட்ச ரூபாய். இந்த தொகையை எந்த அடிப்படையில் மாநில அளவில் எத்தனை மாவட்டங்களுக்கு எத்தனை பள்ளிகளுக்கு எப்படி பிரித்து தருவது என தெரியாமல் அப்படியே விட்டு விட்டதாக தெரிகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களின் போதை பழக்கத்தை மீட்கும் மையம் துவக்கப்பட்டதாக சமூக நலத்துறை அறிவித்தது. 2 ஆண்டாகியும் இந்த திட்டத்திற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. போதை மீட்பு முகாமும் ஒரு பள்ளியில் கூட நடத்தவில்லை. மாணவர்களில் சிலர் கஞ்சா, போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக தெரியவந்துள்ளது. போதை பழக்கத்தில் உள்ள மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது, அவர்களின் நிலையை அறிந்து மீட்டு, சிகிச்சைக்கு உட்படுத்துவது போன்ற முயற்சிகள்  மேற்கொள்ளப்படவில்லை. கண் துடைப்பு அறிவிப்புகளால் தவறான பாதையில் செல்லும் மாணவர்களை மீட்க முடியாத அவல நிலையிருக்கிறது. மாணவர்களின் தற்கொலை தடுப்பு, போதை மீட்பு நடவடிக்கையில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: