மஞ்சூர் - எடக்காடு சாலையில் அந்தரத்தில் தொங்கும் மரம் அகற்றாவிட்டால் விபத்து அபாயம்

மஞ்சூர், செப். 17:மஞ்சூர் - எடக்காடு சாலையில் அந்தரத்தில் தொங்கும் அபாயகர மரத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த மாதம் பெய்த கன மழையில் குந்தாபாலம், மெரிலேன்டு, கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி உள்பட மஞ்சூர் சுற்றிலும் பல்வேறு இடங்களில் ஏராளமான மரங்கள் விழுந்தது. மஞ்சூர் - எடக்காடு சாலையில் முக்கிமலை அருகே சாலையில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டதுடன், அங்கிருந்த கற்பூர மரங்கள் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வெட்டி, மண் சரிவுகளை அகற்றினர்.  

 ஆனால் அப்போது வேரோடு சாய்ந்த ராட்சத கற்பூர மரத்தை அடியோடு வெட்டி அகற்றாமல் அரை, குறையாக வெட்டி விட்டுள்ளனர். தற்போது இந்த மரம் சாலையின் மேல்புறம் அந்தரத்தில் தொங்கியபடி அபாயகர நிலையில் காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் மரம் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளதால், விபத்து ஏற்படுவதற்கு முன் மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: