கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு

கீழ்வேளூர்,செப்.17: கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் 30 கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது. நாகை மாவட்டம் திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பெரிய சிமென்ட் குழாய் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது. ஆறு, வாய்க்கால்கள் குறுக்கே இரும்பு ராட்சத குழாய் பதிக்கப்பட்டும் தேவையான இடங்களில் அந்த பெரிய குழாய் மூலம் தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு அங்கிருந்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நீர் எடுத்து வர மோட்டர் மூலம் நீரை அதிக அழுத்தத்தில் தள்ளப்படுகிறது.

இதனால் பெரிய குழாயில் அதிக அழுத்தத்தில் தண்ணீர் செல்லும். கீழ்வேளூரை அடுத்த கிள்ளுக்குடியில் பாண்டவையாற்றின் குறுக்கே தனியாக பாலம் அமைத்து அதில் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் வீணாகி வருகிறது. தற்போது குழாயில் ஏற்பட்ட உடைப்பு அதிக அழுத்தத்தில் செல்லும் தண்ணீரால் நாளுக்கு நாள் குழாயின் வெடிப்பு அதிகரித்து அதிக அளவில் தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த பாண்டவையாற்றின் குறுக்கே செல்லும் இரும்பு குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் சாட்டியக்குடி, திருக்குவளை, எட்டுக்குடி, தலைஞாயிறு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் கிள்ளுக்குடி பாண்டைவையாற்றின் குறுக்கே செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: