தோகைமலை பகுதியில் தீவனங்கள் இருந்தும் கால்நடைகள் இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றம்

தோகைமலை, செப். 17: தோகைமலை பகுதியில் கால்நடைகளுக்கு போதுமான தீவனங்கள் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் போதிய தீவனங்கள் இருந்தும் கால்நடைகள் இல்லாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் விவசாயிகள் பராமரித்து வந்த கால்நடைகளுக்கு கூட தீவனங்களை பயிரிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டநிலையில், விலை ஏற்றத்தால் விவசாயிகள் தங்கள் வளர்த்து வந்த கால்நடைகளை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் வந்தனர்.

சென்ற ஆண்டுகளில் கால்நடைதுறை மூலம் மானிய விலையில் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மானிய விலையில் தீவனங்கள் வழங்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.  இதனால் சென்ற ஆண்டு பெரும்பாலான கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து விட்டனர். இந்த ஆண்டு பருவமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்து விட்டதாக கூறுகின்றனர்.

ஆடி மாதத்தில் இல்லாமல் தற்போது ஆவணி மாதத்தில் மழை பெய்வதால் மானாவாரி விவசாயிகள் பயிரிட முடியாமல் கைவிட்டனர். இனி கொள்ளு மற்றும் உளுந்து மட்டுமே பயிரிட முடியும் என்ற நிலையில் கால்நடைகளுக்கான புற்கள் தற்போது வளர தொடங்கி உள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பெய்து விவசாய நிலங்களில் கால்நடைகளுக்கான தீவனங்கள் வளர்ந்து வருகிறது. ஆனால் தீவனங்களுக்கு ஏற்ப தற்போது கால்நடைகள் இல்லையே என்று விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். தீவனங்கள் கிடைக்காமல் அடிமாட்டு விலைக்கு நஷ்டத்தில் விற்பனை செய்த கால்நடைகளின் விலை தற்போது கணிசமான விலை ஏற்றம் அடைந்து உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Related Stories: