குடியிருப்புகளை காலி செய்யாமல் இருக்க பட்டா வழங்க வேண்டும் மாவடியான் கோயில் தெரு மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர், செப். 17: குடியிருப்புகளை காலி செய்யாமல் இருக்க பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவடியான் கோயில் தெரு மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கரூர் நகராட்சிககுட்பட்ட மாவடியான் கோயில் தெரு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சிலர் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சலவை தொழில், மீன் பிடிக்கும் தொழில் ஆகிய தொழில்கள் செய்து பிழைத்து வருகிறோம். இந்நிலையில் நகராட்சி சார்பில் குடியிருப்புகளை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் முறையாக வரி செலுத்தி வருகிறோம். பட்டா கேட்டும் இதுவரை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தேவையான பாதுகாப்பு தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதே போல் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கரூர் தாலுகா அலுவலகம் மற்றும் இ சேவை மையத்தில் அதிகளவு புரோக்கர்களின் தொல்லை உள்ளது. அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக பணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் சேவை வழங்க கோரிக்கை: கரூர் மாவட்டம் கடவூர் இயற்கை கிராம முன்னேற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடவூர் ஊராட்சியில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி. இந்த ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. விபத்து மற்றும் கர்ப்ப கால சிகிச்சை பெறுவதற்கு 108 ஆம்புலன்ஸ் தேவை என்றால் தரகம்பட்டி அல்லது அய்யலூர் ஆகிய பகுதியில் இருந்துதான் வர வேண்டியுள்ளது. எங்கள் பகுதிக்கு வருவதற்கு 20 கிமீட்டருக்கு மேல் தூரம் உள்ளதால் கால தாமதம் ஆகிறது. எனவே எங்கள் பகுதிக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல் இவர்கள் வழங்கிய மற்றொரு மனுவில், எங்கள் பகுதியில் நோய் வந்த நாய்கள் தெருக்கள் மற்றும் கடைவீதியில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதோடு, நாய்க்கடிக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: