கீரிப்பாறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து முதியவர் பலி குழந்தை உள்பட 9 பேர் காயம்

பூதப்பாண்டி, செப்.17: கீரிப்பாறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்தார். குழந்தை உள்பட 9 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் எபிராகிம் (50). இவரது தலைமையில் 5 ஆண்கள், 13 பெண்கள், 4 குழந்தைகள் என்று 22 பேர் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்தனர். வேனை அந்தோணி செபஸ்தியான் ஓட்டினார். இவர்கள் கீரிப்பாறை அருகே உள்ள காளிகேசம் பகுதிக்கு செல்லலாம் என வந்தனர்.

தற்போது மழை காரணமாக தண்ணீர் அதிகமாக வருகிறது. எனவே வனத்துறையினர் காளிகேசத்துக்கு அனுமதிக்கவில்ைல. இதையடுத்து கீரிப்பாறை அருகே பால்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் பகுதியில் தண்ணீர் இருப்பதாக கிடைத்த தகவல்படி அங்கு குளிக்க சென்றனர். மாலையில் திரும்பி வரும்போது அந்த பகுதியில் உள்ள சாலை வளையில் வேன் பிரேக் பிடிக்காமல் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் எபிராகிம் வேனில் இருந்து தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவர் மீது வேன் கவிழ்ந்தது. இதில் உடல் நசுங்கிய எபிராகிம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவத்தில் வேனில் இருந்தவர்கள் காயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள் சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஜோஸ்வா என்ற 4 வயது குழந்தை உள்பட 9 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: