வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் தொழிலாளர்கள் மனு கொடுத்து 7 மாதமாகியும் ₹2 ஆயிரம் கிடைக்கல மனுதாரர்கள் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை, செப்.17: மனுகொடுத்து 7 மாதமாகியும் இன்னும் ₹2 ஆயிரம் கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும் என தெரியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாயை அரசு வழங்கியது. அதே போல் பிப்ரவரி மாதம் தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ₹2 ஆயிரம் வழங்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். மேலும், 2003 ஆண்டிற்கான வறுமைகோட்டின் கீழ் உள்ளவர்கள் பட்டியல்படி பயனாளிகள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் இணைத்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் வழங்கலாம் என அறிவித்தது. இதனால், போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திரண்டு மனு அளித்தனர். மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் ெதரிவித்தனர்.

இந்நிலையில், போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முட்டி மோதி மனு கொடுத்து 7 மாதமாகியும் இன்னும் பணம் வரவில்லை. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ₹2 ஆயிரம் பணம் கிடைக்கும் என தெரிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்து 5 மாதமாகியும் இன்னும் அதற்கான நடவடிக்கையும் இல்லை. எந்த அறிவிப்பும் இல்லை. போட்டி போட்டு கொண்டு மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. பணம் எப்போது கிடைக்கும் என்று மனுதாரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் ேகட்டதற்கு எந்த தகவல்களும் தங்களுக்கு இன்னும் வரவில்லை என்றனர். இதுதான் தற்போது உள்ள ஆட்சியின் செயல்பாடுகள் என்று மனு கொடுத்த பொதுமக்கள் புலம்புகின்றனர்.

Related Stories: