பைனான்சியர் வீட்டில் 18 சவரன், 1 கிலோ வெள்ளி திருட்டு போலீசார் விசாரணை மகள் திருமணத்திற்காக சென்ற

ஆரணி, செப்.17: ஆரணி அருகே மகள் திருமணத்திற்காக சென்ற பைனான்சியர் வீட்டில் 18 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்னர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(57), பைனான்சியர். இவரது 3வது மகள் காவியா. இவருக்கு சென்னை கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவருடன் நேற்று இரு வீட்டார் சம்மதத்துடன் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலர் நகர் பகுதியில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு பழனி தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் மறைமலர் நகர் சென்றிருந்தார். மகள் திருமணத்தை முடிந்ததும் பழனி தனது குடும்பத்தினருடன் நேற்று மதியம் 1.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டில் உள்ள அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 18 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, பழனி ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், எஸ்ஐ பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: