செய்யாறில் பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலில் மின்னல் தாக்கி கோபுரம், இடிதாங்கி கருவி சேதம் பக்தர்கள் அதிர்ச்சி

செய்யாறு, செப்.15: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் மின்னல் தாக்கியதில் கோபுரம் மற்றும் இடிதாங்கி கருவி சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களும் சேதமடைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் கடந்த சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று மாலை 5.45 மணியளவில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது.

செய்யாறில் பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று மாலை பெய்த மழையின்போது மின்னல் தாக்கியதில் வேதபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தின் யாழி கொடுங்கை மேல்பகுதி சேதமடைந்தது. மேலும், ராஜகோபுரத்தில் வைத்திருந்த இடிதாங்கி கருவியும் உடைந்து கீழே விழுந்தது.

கோயில் ராஜகோபுரம் சேதமடைந்த தகவல் பரவியதும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோயிலுக்கு வந்து கோயிலை பார்வையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அதேபோல், மின்னல் தாக்கியதில் கோயிலில் உள்ள மின்சாதன பொருட்களான சிசிடிவி கேமராக்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள், யுபிஎஸ், மின்விளக்குகள் சேதமடைந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் மின்விளக்குகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ராஜகோபுரம் சேதமடைந்ததையொட்டி சிவாச்சாரியார்கள் பரிகார பூஜைகள் செய்தனர். சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்ததால் கொள்ளை சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க கோயில் ஊழியர்கள் இரவு பணிக்காக கோயிலில் தங்க வைக்கப்பட்டனர்.

கோயில் ராஜகோபுரத்தில் இடிதாங்கி கருவி வைத்திருந்தும் மின்னல் தாக்கியது பக்தர்களிைடயே வியப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்தபோது, இந்த இடிதாங்கி கருவி 50 ஆண்டுகளுக்கு முன்பே ராஜகோபுரத்தில் பொருத்தியிருந்ததாகவும், மின்னல் தாக்கினால் அதன்மூலம் ஏற்படும் மின்சாரத்தை தரையில் பாய்ச்சும் வகையில் இடிதாங்கி கருவியில் இருந்து தரைக்கு கொண்டு செல்லும் வயர் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் மின்னல் தாக்கியபோது இடிதாங்கி கருவி செயல்படவில்லை. கோபுரத்துடன் இடிதாங்கி கருவியும் உடைந்து விழுந்து விட்டது. அறநிலைய துறை அதிகாரிகள் உரிய பராமரிப்பு பணிகளை செய்திருந்தால் கோபுரம் சேதம் அடைந்திருக்காது என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: