மேலப்பாளையம் கன்னிமார்குளம் தூர் வாரும் பணி தீவிரம்

நெல்லை, செப். 15: மேலப்பாளையத்தில்  கன்னிமார்குளம் தூர் வாரும் பணி தீவிரமடைந்துள்ளது. நெல்லை மாநகராட்சி,  மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட கன்னிமார்குளம் சுமார் 64 ஏக்கர் பரப்பளவு  கொண்டது. இந்த குளம் கருவேல மரங்கள் சூழ்ந்து, கரைகள் இன்றி காணப்பட்டது.  கலெக்டரின் அறிவுரையின்படி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக  ஆர்வலர்கள், கொடையாளர்கள் ஆகியோர்களின் பங்களிப்போடு மேலப்பாளையம்  கன்னிமார்குளம் தூர் வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை  10 ஆயிரம் சதுர அடி பரப்பிற்கு 3 மீட்டர் ஆழம் வரை தூர் வாரப்பட்டுள்ளது.  நிகழ்ச்சிக்கு தூர் வாரும் பணி ஒருங்கிணைப்பாளரும், பொறியாளருமான  அப்துல் முத்தலிப் தலைமை வகித்தார். கலீல்ரகுமான் வரவேற்றார். டாக்டர் பிரேமசந்திரன் நிதியுதவி வழங்கினார்.

 நிகழ்ச்சியில்  ரோட்டரி சங்கத் தலைவர்கள் நெல்லை முகமது ஈசா, மேலப்பாளையம் ஹசன், மற்றும் முத்துப்பாண்டி,  பொறியாளர் இக்பால், சாகுல்ஹமீது பாதுஷா, காஜாமுகைதீன், அப்துல்காதர், பீர்மைதீன், செய்யதுஅப்துல்காதர், காஜாமுகைதீன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தூர் வாரும் பணியில்  ஈடுபட்டனர். இந்த கன்னிமார்குளம் 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை  தூர் வாரப்படாமல் குப்பை கிடங்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தூர்  வாரப்படுகிறது. தூர் வாரும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு இளநீர் உள்ளிட்ட பானங்களை   மின்னல் அறக்கட்டளை  நிறுவனர் மில்லத் இஸ்மாயில் வழங்கினார். ஏற்பாடுகளை மேலப்பாளையம்  நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்க நிர்வாகிகள் முத்தலிப்,  செய்யது முகமது புகாரி சேட், காஜாமைதீன் பாதுஷா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: