துறையூர் அருகே வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்

துறையூர், செப்.15: துறையூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் கீரம்பூர் ஊராட்சி முல்லை தெருவில் சாலையோரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மழை நீரோடு கழிவுநீரும் கலந்து 20 வீடுகளுக்குள் புகுந்தது. துறையூர் மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதில் கீரம்பூர் ஊராட்சி முல்லை தெரு வழியாக எல்லா இடங்களிலும் இருந்து வரும் வடிகால் வாய்க்கால் கழிவுநீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. தற்போது இந்த வடிகால் வாய்க்காலில் அந்த பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் கீரம்பூர் ஊராட்சி முல்லை தெருவில் கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் செல்லமுடியாமல் குளம்போல் தேங்கி மழைநீருடன் அருகாமையிலுள்ள தாழ்வாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் எலிகள் மற்றும் விஷஜந்துக்கள் தண்ணீரில் மிதந்து வீட்டுக்குள் வருகிறதா என அச்சத்துடன் பரிதவித்த பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். மேலும் இரவு முழுவதும் வீட்டிற்குள் புகுந்த கழிவுநீரை வெளியேற்றிக் கொண்டிருந்தனர். இதனால் அருவெறுப்படைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை கீரம்பூலிருந்து துறையூர் செல்லும் சாலையின் குறுக்கே வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் துறையூரிலிருந்து கீரம்பூர் செல்லும் பஸ்களும், திருப்பூரில் இருந்து துறையூர் செல்லும் பஸ்களும் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த பிடிஓ சுப்பையா, தாசில்தார் சத்தியநாராயணன் மற்றும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: