பள்ளிக்கரணையில் பெண் பலியான சம்பவம் எதிரொலி அனுமதியின்றி வைக்கப்பட்ட 146 பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் திருச்சி மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

திருச்சி, செப்.15: சென்னை பள்ளிக்கரணையில் பிளக்ஸ் பறந்து விழுந்து பெண் பலியான சம்பவ எதிரொலியாக திருச்சி மாநகரில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த 146 பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையோரம் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் காற்றில் பறந்து ஸ்கூட்டியில் சென்றவர் மீது விழுந்ததில், அதில் சென்ற சுபஸ்ரீ  என்ற பெண் தடுமாறி லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறி த்து நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அவசர கதியில் கலெக்டர் உத்தரவின் பேரில் பிளக்ஸ் பேனர்கள் அதிரடியாக அந்தந்த மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களால் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் 4 கோட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 146 பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். மேலும் இது தவிர 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் கட்டி விளம்பரம் செய்யப்பட்ட பிளக்ஸ் தட்டிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றனர். தொடர்ந்து அனுமதியின்றி பிளக்ஸ் வைத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: