தேவைக்கு அதிகமாக புரதச்சத்தை மாடுகளுக்கு கொடுக்கக்கூடாது கால்நடை மருத்துவர்கள் ஆலோசனை

ஓமலூர், செப்.15: மழை காலத்தில் மாடுகளுக்கு அதிகப்படியான புரதச்சத்துள்ள உணவை தரக்கூடாது என ஓமலூர் கால்நடை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மட்டும் கருப்பூர் வட்டாரத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால், கால்நடைகளுக்கு ஒருவிதமான நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கவும், குறிப்பாக மாடுகளுக்கு வயிறு உப்புசத்தை தடுப்பது குறித்து, ஓமலூர் கால்நடை மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். புரதச்சத்து நிறைந்த பயறு வகை, தானியம், நன்றாக மாவு போன்ற அரைக்கப்பட்ட தீவனம், சமைக்கப்பட்ட அரிசி சாப்பாடு, திருவிழா காலங்களில் மீதமாகும் பொங்கல் மற்றும் கூழ் வகைகளை கொடுக்கக்கூடாது.

இவற்றை கொடுக்கும்போது மாடுகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படும். இது போன்ற நேரத்தில் மாடுகள் இறக்கவும் நேரிடும். இதை தடுக்க முதலில் மாடுகளுக்கு விளக்கெண்ணெய் அளித்து, உரிய கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். மேலும், 50 சதவீதத்திற்கு மேல் புரதச்சத்து நிறைந்த தீவனம், அரிசி சாதம், அரைக்கப்பட்ட தீவனங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்பில் விவசாயிகள், சில முன் மாதிரிகளை கையாள வேண்டும். இதன்படி, கறவை மாடுகளுக்கு புளித்த நீரை குடிப்பதற்கு குடிக்க கொடுக்க கூடாது. மாட்டின் மொத்த பால் உற்பத்தி குறையும் என்பதால், கன்று ஈன்ற மாடுகளை 85 நாட்களுக்கு முன்பு சினைப்படுத்தக்கூடாது.  

மக்காச்சோளம் செரிமானம் குறையும் என்பதால் அரைகுறையாக அரைத்து கொடுக்கக்கூடாது. கன்று ஈன்ற மாடுகளில் நஞ்சுக்கொடி விழவில்லை எனில், அதில் கல்லை கட்டி விடக்கூடாது. ஒரு ஈத்து முடிய கலப்பு தீவனத்தில் உள்ள தீவன வகைகளை அடிக்கடி மாற்றக்கூடாது. அட்ரீனல் என்ற ஹார்மோன் சுரக்கும் என்பதால் பால் கறக்கும் சமயங்களில் மாடுகளை பயமுறுத்தக்கூடாது. அதிகப்படியான புரதச்சத்து அமோனியா வாயுவாக மாறி கர்ப்பப்பையை தாக்கும் என்பதால், தேவைக்கு அதிகமாக புரதச்சத்துக்களை மாடுகளுக்கு கொடுக்கக்கூடாது. அரைகுறையாக கறந்து பாலை மடியில் தேங்க விடக்கூடாது. கறவை மாடுகளுக்கு ஏதாவது பாதிப்புகள் தென்பட்டால், உடனடியாக கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு கால்நடை மருத்துவர்கள் கூறினர்.

Related Stories: