ஒகேனக்கலில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பரிசல் இயக்கினால் கடும் நடவடிக்கை

பென்னாகரம், செப். 15:  ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகளுக்கான ஆலோசனை கூட்டம் சப் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி சென்றும் மகிழ்வது வழக்கம். தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் ஒருசில பரிசல் ஓட்டிகள் தடையை மீறி பரிசல் இயக்கி வந்தனர். இதனால் கடந்த 4நாட்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த அஞ்சலாட்சி  என்ற பெண், ஆற்றில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் பலியானார். இதையடுத்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின் பேரில் ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த சப்கலெக்டர் சிவன் அருள் கூறியதாவது: பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கின்ற பகுதியில் மட்டுமே பரிசல்களை இயக்கவேண்டும். தடைசெய்யப்பட்ட பகுதிகள் பரிசலை இயக்க கூடாது.

தடை செய்யப்பட்ட பகுதியில் பரிசல் இயக்கினால், பரிசல் ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது . மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும் என விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பென்னாகரம் தாசில்தார் சதாசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், வனத்துறை அலுவலர் கேசவன் மற்றும் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: