ராமநாதபுரத்தில் லோக் அதாலத் மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்

கீழக்கரை, செப். 15: ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.ராமநாதபுரம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் சார்பில் லோக் அதாலத் நிகழ்ச்சி ராமநாதபுரம் சமரசதீர்வு மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன், சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனியரசு, மகிளா கோர்ட்டு நீதிபதி பகவதியம்மாள், முதன்மை குற்றவியல் நீதிபதி சுபத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்-கோர்ட்டு நீதிபதி ப்ரீத்தா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் பேசியதாவது: சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இந்த ஆண்டு 3வது முறையாக இந்த லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மூலம் இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் வழக்கு செலவு இல்லாமல் ஒருவரைஒருவர் விட்டுக்கொடுத்து வழக்கை முடித்துக்கொள்ள இது நடத்தப்படுகிறது. லோக் அதாலத் நிகழ்ச்சியில் ஏற்படும் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 897 வழக்குகளும், ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்து 634 வழக்குகளும் தீர்வு காணப்பட்டுள்ளன. தற்போது இந்த லோக் அதாலத்தில் ஆயிரதது 360 வழக்குகள் தீர்வு காண அடையாளம் காணப்பட்டு ஏற்கனவே பல முன் அமர்வுகள் மூலம் இதுவரை 209 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் உள்ள வழக்குகளை இந்த லோக் அதாலத்தில் 14 அமர்வுகள் மூலம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, செயலாளர் நம்புநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: