ராமநாதபுரம் மாவட்டத்தில் இ-அடங்கல் ஆன்ைலனில் ஏற்றும் பணி தீவிரம்

திருவாடானை, செப். 15:  ராமநாதபுரம் மாவட்டத்தில் இ-அடங்கள் ஆன்லைனில் ஏற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இனிமேல் விவசாயிகள் ஆன்லைனிலேயே இ-அடங்கள் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரிடம்  சிட்டா நகல், அடங்கல் நகல், வரைபட நகல் போன்றவற்றை நேரடியாகச் சென்று பெற்று வந்தனர். காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு கணினி சிட்டா நகல், முழு வரைபடங்கள் ஆகியவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு இவற்றை விவசாயிகள் பொது இ-சேவை மையங்களிலும், தனியார் கணினி மையங்களிலும் பெற்றுவருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி குறித்த விவரங்கள் அடங்கிய சான்றிதழ் அடங்கல் சான்று ஆகும். இந்த அடங்கல் சான்று கடந்த வருடம் வரை கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் சென்று இலவசமாக பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு அடங்கல் சான்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அடங்கல் சான்று ஆன்லைனில் ஏற்றும் பணி நடந்து வருகிறது.முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக ஆன்லைனில் அடங்கல் நகல் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பட்டாதாரிகளின் அடங்கல் சான்று பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு அக்டோபர் மாதமும் புதிய அடங்கல் சான்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். அந்த சான்றின் மூலமாக பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனால் விவசாயிகள் இந்தாண்டு உரிய நேரத்தில் இடங்கள் சான்று பெற்று காப்பீடு செய்ய முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் வழக்கம்போல் கையால் எழுதப்பட்ட அடங்கலை இந்த ஆண்டு மட்டும் வழங்கிவிட்டு அதன் பிறகு நெருக்கடி இல்லாத நிலையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: