கமுதி தெருக்களில் தண்ணீர் தொட்டியில் உள்ள தகரத்தால் விபத்து அபாயம் டூவீலர் வாகன ஓட்டிகள் அவதி

கமுதி, செப். 15: கமுதியில் உள்ள பல தெருக்களில், தண்ணீர் தொட்டி மீது வைக்கப்பட்டுள்ள தகர மூடிகள் இரு.சக்கர வாகனங்களில் செல்வோரின் கால்களை கிழிக்கும் அளவுக்கு உள்ளது. கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் உள்ள பெரும்பாலான தெருக்கள் குறுகலான பாதையாக உள்ளன. கிட்டங்கி தெரு, நார்காரத் தெரு, கொத்தனார் தெரு, அந்தோணியார் தெரு, சவேரியார் தெரு, ஆதிதிராவிடர் தெரு, பேட்டை தெரு, கண்ணார்பட்டியில் உள்ள தெருக்கள் மற்றும் பல தெருக்கள் மிக குறுகலாக உள்ளவை ஆகும்.

இதில் பலர் அவரவர் வீட்டின் முன்பு குடிதண்ணீர் தொட்டிகள் கட்டியுள்ளனர். பேரூராட்சியில் இருந்து வரும் குடிதண்ணீர் இதில் விழுவதற்காக இதை கட்டியுள்ளனர். இதனால் பாதை சுருங்குவதால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த தொட்டி மீது தகரத்தாலான மூடியை வைத்துள்ளனர். இந்த மூடி பல இடங்களில் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் எதிரே வாகனம் அல்லது யாரும் நடந்து வந்தாலும் ஒதுங்கி சென்றால், அந்த தகரம் கால்களை கிழித்து விடும், மேலும் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தால் உயிர் பலி வாங்கும் அளவிற்கு கூர்மையாக உள்ளது.

இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்தால் பேராபத்து விளையும். தொட்டிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி கொடிய நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: