மதுரை அரசு மருத்துவமனையில் காம்ப்ளக்ஸ் ஆப்ரேஷன் தியேட்டர் கட்டும் இடத்தில் மண் பரிசோதனை 5 நாட்கள் நடத்தப்படுகிறது

மதுரை, செப். 15:  மதுரை அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆப்ரேஷன் தியேட்டர் கட்டுமான இடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணி நேற்று துவங்கியது. இப்பணி 5 நாட்கள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில், ஒரே இடத்தில் 26 ஆப்ரேஷன் தியேட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட, `காம்ப்ளக்ஸ் ஆபரேஷன் தியேட்டர்’ அமைய உள்ளது. இதற்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம், மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவமனையின் கண்வார்டு, தோல் நோய் சிகிச்சை பிரிவு மற்றும் அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், காம்ப்ளக்ஸ் ஆபரேஷன் தியேட்டருக்கான கட்டிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த இடத்தை தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குனர் திருநாவுக்கரசு, ஒருங்கிணைப்பாளர் காமாட்சி ஆகியோர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்தபின்பு, இந்த இடத்தில் மண் பரிசோதனை ெசய்யும் பணி நேற்று துவங்கியது. டீன் கார் நிறுத்தும் இடம் அருகில் மற்றும் இரு இடங்களிலும் இப்பணிகள் 5 நாட்கள் நடக்கிறது. இங்கு எடுக்கப்படும் மண், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, மண்ணின் தரம் குறித்து பரிசோதனைக்கு பின்னரே, இந்த இடத்தில் எத்தனை மாடி கட்டிடங்கள் கட்டுவது என்பது முடிவு செய்யப்படும். அதன் பின்னரே இப்பகுதிகள் இடிக்கப்பட்டு, பூமிபூஜை நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: