லோக் அதாலத்தில் 2,136 வழக்குகளுக்கு தீர்வு ரூ.7.30 கோடி வசூல்

திண்டுக்கல், செப். 15:  திண்டுக்கல் ஒருங்கிணைந்த ழவளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதில் வங்கி வராக்கடன் வழக்குகள் 441ம், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் 1,695 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டது. இவ்வழக்குகளை முடிவு காண மாவட்டம் முழுவதும் 11 அமர்வுகள் ஏற்ப்படுத்தப்பட்டிருந்தன. இதன்மூலம் 7 கோடியே 30 லட்சத்து 23 ஆயிரத்து 746 ரூபாய் தரப்பினர்களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த அமர்வுகளில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா, கூடுதல் சிறப்பு மாவட்ட நீதிபதி இளங்கோவன், குடும்ப நல நீதிபதி சிங்கராஜ், தலைமை குற்றவியல் நீதிபதி சரத்ராஜ், முதன்மை சார்பு நீதிபதி எழில் வேலவன், கூடுதல் சார்பு நீதிபதி செல்வக்குமார், சிறப்பு சார்பு நீதிபதி சுதாகர், நீதித்துறை நடுவர் எண்-1 முருகன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி லலிதாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தகில் ரமணியை, மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.

*பழநி சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடந்த லோக் அதாலத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான கோதண்டராஜ், குற்றவியல் நடுவர் நீதிபதி ரகுபதி ராஜா, குற்றவியல் விரைவு நீதிபதி மணிகண்டன், அமர்வு வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் தீர்வு காணப்பட்டு 4 சொத்து வழக்குகளில் ரூ.13 லட்சம்,13 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.56.76 லட்சம், 451 கிரிமினல் வழக்குகளில் ரூ.4.74 லட்சம், பாங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, யூகோ வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனங்களின் உள்ளிட்டவைகளில் நடந்த 55 வழக்குகளின் மூலம் ரூ.72, 60, 834 வழங்கப்பட்டது.

Related Stories: