நீலகிரி மாவட்டத்தில் நீர் பனி விழத்துவங்கியது

ஊட்டி,  செப்.15: நீலகிரி மாவட்டத்தில் இம்முறை முன்னதாகவே நீர் பனி  விழத் துவங்கியுள்ளதால் தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயிகள் பாதிக்கும்  அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும்  மே மாதம் இறுதி வாரத்தில் துவங்கி நவம்பர் மாதம் வரை மழை பெய்யும்.  நவம்பர் மாதம் துவங்கும் பனி மார்ச் மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும்.  மழைக் காலங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி மகசூல் அதிகரிக்கும்.

இம்முறை  கடந்த மாதம் முதல் எந்நேரமும் மேகமூட்டமும், மழையும் காணப்பட்டது. தொடர்  மழையால் தற்போது அனைத்து பகுதிகளிலும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.  

அதேபோல், மலைப்பாங்கான பகுதிகளில் கூட விவசாயிகள் விவசாயம்  செய்யத்துவங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த இரு நாட்கள் முன் வரை  நீலகிரி மாவட்டத்தில் மேக மூட்டம் மற்றும் மழை பெய்து வந்தது. இதற்கிடையில்  கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்து வெயில்  வாட்டி வருகிறது. அதே சமயம் இரு நாட்களாக நீர் பனி விழத்துவங்கியுள்ளது. குறிப்பாக,  ஊட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் பனியின் தாக்கம் சற்று  அதிகமாகவே காணப்படுகிறது.

 பொதுவாக செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் தான்  பனி விழத்துவங்கும். ஆனால், இம்முறை சற்று முன்னதாக விழத்துவங்கியுள்ளது.  பனி விழத்துவங்கியுள்ளதால், தேயிலை செடிகளை நோய் தாக்கும் அச்சத்தில்  விவசாயிகள் உள்ளனர். அதே போல், மலை காய்கறி விவசாயிகளும்  அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். தேயிலை மற்றும் மலை காய்கறிகளை பாதுகாக்கும்  பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீர் பனியால், காலை நேரங்களில்  பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால், வாகனங்களை இயக்க முடியாமல்  ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். பனியால், குளிரும் அதிகரித்துள்ளது. மாலை  முதல் அதிகாலை வரை ஊட்டி நகரில் குளிரின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும்  சற்று அதிகமாக காணப்படுகிறது.  இரண்டாவது சீசனுக்காக நடவு  செய்யப்பட்டுள்ள மலர் செடிகளில் தற்போது பூக்கள் பூத்துள்ளன. இந்த வாரம்  இறுதியில் மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்படடுள்ளது. இந்நிலையில்,  ஊட்டியில் தற்போது நீர் பனி கொட்டுவதால், மலர் செடிகளை பாதுகாக்கும்  பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டாம் சீசனை முன்னிட்டு தற்போது  சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது. குளிரின் காரணமாக  ஸ்வெட்டர், சால்வை மற்றும் ஜெர்கின் போன்ற வெம்மை ஆடைகளை வாங்குவதால்,  வியாபாரிகளுக்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.

Related Stories: