ரயில்வே ஸ்டேசனில் மழை, வெயிலில் நிற்கும் வாகனங்களுக்கு பணம் வசூல் மேற்கூரை அமைப்பதில் மெத்தனம்

காரைக்குடி, செப்.11: காரைக்குடி ரயில் நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்தில் மேற்கூரை, லைட் உள்பட எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் வாகனம் எடுக்க கூட முடியாத நிலை உருவாகி உள்ளது.   காரைக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு 14 தினசரி ரயில்களும், 6 வாராந்திர ரயில்களும் வந்து செல்கின்றன. தினமும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். காலை 4.30 மணிக்கு காரைக்குடி முதல் சென்னை வரை செல்லும் பல்லவன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம், மானாமதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் வேலைக்கு செல்கின்றனர். அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இங்குள்ள வாகன காப்பகத்தில் தங்களது டூவீலர்களை வைத்து விட்டு செல்கின்றனர். 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இங்குள்ள காப்பகத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஒரு வாகனத்துக்கு கட்டணமாக ரூ.5 வாங்கப்படுகிறது. ஆனால் இதற்கு முறையான எந்த ஒரு வசதியும் இல்லை. போதிய மேற்கூரை வசதி செய்யப்படவில்லை. வாகனங்கள் அனைத்தும் வெயில், மழையில் நிறுத்தி வைக்க வேண்டிய அவல நிலை உள்ளது. தவிர லைட் வசதி என்பது முற்றிலும் கிடையாது. இதனால் இரவு நேரத்தில் வாகனத்தை எடுப்பதற்கு பெரும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. தவிர பாம்பு போன்ற விஷ பூச்சிகள் அதிக அளவில் உலா வரும் இடமாக உள்ளதால் இரவு நேரத்தில் எதில் கால் வைக்கிறோம் என்றே தெரியாமல் பயணிகள் தடுமாறி வருகின்றனர்.  

இது குறித்து பயணிகள் கூறுகையில்,  மாவட்டத்தில் அதிக வருவாய் வரக்கூடிய ரயில் நிலையமாக காரைக்குடி ரயில் நிலையம் உள்ளது. ஆனால் பயணிகள் வசதிக்காக உள்ள வாகன காப்பத்தில் எந்தவிதமாக அடிப்படை வசதியும் இல்லை. புதிய ரயில்நிலைய அலுவலகம்  கட்டப்பட்டதில் இருந்து காப்பகத்திற்கு என நிலையான செட் அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனரே தவிர நடவடிக்கை எதும் எடுக்கவில்லை. லைட் வசதி என்பது இல்லாததால், இரவு நேரத்தில் வரும் போது டார்ச், செல்போன் லைட் வெளிச்சத்தில் வாகனத்தை தேடி எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் அதிகாலையில் வாகனத்தை வைக்கும் போது பெரும் சிரமம் உள்ளது. இப்பகுதியில் பாம்பு உள்பட விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் லைட் இல்லாததால் அதிகாலை, இரவு நேரங்களில் உள்ளே நுழைந்து வாகனத்தை எடுக்கவே அச்சமாக உள்ளது என்றனர்.

Related Stories: