ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள மாநகர பஸ்களை உடனடியாக இயக்க வேண்டும்

காஞ்சிபுரம், செப்.11: ஆலந்தூர் தொகுதியில் பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள மாநகர பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். புதிதாக பல்வேறு வழித்தடத்தில் மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கோ.கணேசனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட்ட பஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. நங்கநல்லூரில் இருந்து தாம்பரம், வண்டலூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஒரே பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

நங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், நங்கநல்லூரில் இருந்து உயர்நீதிமன்றம், நங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு, கீழ்கட்டளையில் இருந்து பெரம்பூர், கிண்டியில் இருந்து சோழிங்கநல்லூர், நங்கநல்லூரில் இருந்து சைதாப்பேட்டை, கவுல்பஜாரில் இருந்து கோயம்பேடு வரை கிண்டி வழியாக இயக்கப்பட்ட பஸ்கள். ஆலந்தூரில் இருந்து வேளச்சேரி, கீழ்கட்டளையில் இருந்து தி.நகர் வரை நங்கநல்லூர், பழவந்தாங்கல் வழியாக 5 பஸ்கள் இயக்கப்பட்டன. அதில், தற்போது 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் தினமும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டும், சேவை குறைக்கப்பட்டும் உள்ளன. அந்த பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், தொமுச பேரவை பொருளாளர் ஆ.நடராஜன், வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இருந்தனர்.

Related Stories: