திருக்கழுக்குன்றம் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும்

திருக்கழுக்குன்றம், செப்.11: திருக்கழுக்குன்றம் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரியில் பாலாற்று பாலம் அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை கடந்து இரும்புலிச்சேரி, எடையாத்தூர்,   அட்டவட்டம், சாமியார் மடம், சின்ன எடையாத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டும். கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், இந்த பழமையான பாலத்தின் பாதியளவு அடித்து சென்றது. இதனால், பாலத்தை கடந்து செல்லும் கிராம மக்கள், வெளியில் வர முடியாமல் முடங்கினர். பின்னர், தண்ணீர் வடியும் வரை படகு மூலம் கரையைக் கடந்து வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.அதன்பிறகு, தண்ணீர் வடிந்தவுடன் கிராம மக்களே மணல் மூட்டைகளை அடுக்கி, அதன் மீது நடந்து செல்வதற்கும், சைக்கிள் மற்றும் பைக் செல்வதற்கும் பாதை அமைத்தனர். ஆனால், பஸ்  உள்ளிட்ட பெரிய வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையொட்டி, பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பழைய பாலத்தை முற்றிலுமாக அகற்றிவிட்டு, தரமான புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என தொடர்ந்து மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், தொடர்ந்து பொதுமக்கள் புறக்கணிப்பட்டு தனித்தீவில் வாழ்வதைபோல் எண்ணுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2015 மழை வெள்ளத்தின் போது அடித்து செல்லப்பட்ட பாலத்தை பார்வையிட அமைச்சர்கள் முதல்  அதிகாரிகள் வரை வந்தனர். அப்போது, உடனடியாக எங்களுக்கு பாலம் கட்டி தாருங்கள் என நாங்கள் கெஞ்சினோம். அதற்கு, உடனடியாக கட்டித் தருவதாகவும் அவர்கள் உறுதியளித்து சென்றனர். ஆனால், இதுவரை பாலம் கட்டும் பணி துவங்கவே இல்லை. சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டு கிராமத்தினர் போல் நாங்கள் தவிக்கிறோம்.    எனவே, எங்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக அடுத்த மழை வெள்ளம் ஏற்படுவதற்குள், இந்த பாலத்தை அகற்றிவிட்டு, தரமாக புதிய பாலம் கட்டி முடிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: