பண்ருட்டி ஊராட்சியில் சட்டவிரோத தண்ணீர் திருட்டு

காஞ்சிபுரம், செப்.11: காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சியில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள், கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பண்ருட்டி ஊராட்சியில் 2500க்கும் மேற்பட்டடோர் வசிக்கிறோம். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. கடுமையான வறட்சியால் எங்கள் ஊராட்சிப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்வதால் பொதுமக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து சட்டவிரோதமாக தண்ணீர் திருடப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பண்ருட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை பகுதிக்கு அருகிலும், பண்ருட்டி குளக்கரைக்கு சற்று தொலைவிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக எங்களிடம் எந்த அனுமதியும் வாங்கவில்லை என தெரிவித்தார். இதுபோன்று ஆழ்துளை கிணறு அமைத்து அதிகளவில் வெளியிடங்களுக்கு தண்ணீரை எடுத்து செல்வதால் பண்ருட்டி ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. எனவே, பண்ருட்டி ஊராட்சி கிராம மக்களின் நலன் கருதியும், வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டும் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை தடுத்து நிறுத்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: