நினைத்த இடத்தில் நிற்கும் மினிபஸ்களால் போக்குவரத்து இடையூறு

அருப்புக்கோட்டை, செப். 10: அருப்புக்கோட்டையில், நினைத்த இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கும் மினிபஸ்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டையில் 7க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன. திருக்குமரன் நகரிலிருந்து சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி வரையும், நாடார் சிவன்கோவில் பகுதியிலிருந்து, கட்டங்குடி வரையும், திருக்குமரன் நகரிலிருந்து அரசு மருத்துவமனை வரையும், நாடார் சிவன் கோவில் பகுதியிலிருந்து புலியூரானுக்கும், ஆத்திப்பட்டிக்கும் மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை நகரின் முக்கிய நிறுத்தங்களிலிருந்து பயணிகளை ஏற்றி, இறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், முறையாக  பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை. நினைத்த இடத்தில் ஏற்றி இறக்குகின்றனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.  மேலும், நாடார் சிவன்கோவில் சந்திப்பு பகுதி, எஸ்பிகே பள்ளி ரோட்டில் மினிபஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த ரோட்டில் 2 மேல்நிலைப்பள்ளிகள், 2 மழலையர் பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு கல்லூரி உள்ளது. இந்த சாலை வழியாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் தினசரி நடந்தும், சைக்கிளிலும் சென்று வருகின்றனர்.

காலை 8 மணியிலிருந்து 9.15 மணி வரை இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதுதவிர 500க்கு மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் இங்கு வந்து தான் கூடுவர். இதனால், இந்த பகுதியில் நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் ரோட்டை அடைத்து மினிபஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். கனரக வாகனங்களும் செல்ல இடையூறு ஏற்படுகிறது. இந்த சாலையில் அதிக நேரம் நிறுத்தி, பயணிகளை ஏற்ற மினிபஸ்களுக்கு அரசு உத்தரவு இல்லை என கூறப்படுகிறது. இதையும் மீறி மினிபஸ்களை நிறுத்தி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.  எனவே, மினிபஸ்களை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: