வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நெட்வொர்க் பிரச்னையால் புதிய செயலி திட்டம் மந்தம்

புதுச்சேரி,  செப். 10:

நெட்வொர்க் பிரச்னை உள்ளிட்ட சில குறைபாடுகள் காரணமாக வாக்காளர்  பட்டியல் திருத்தப் பணிக்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய செயலி திட்டம்  மந்த கதியில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம்  சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் பார்க்கும் பணிக்கான செயல் திட்டம் கடந்த 1ம்தேதி  புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநில தேர்தல் அலுவலகத்தில்  நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அருண் பங்கேற்று, வாக்காளர் பெயர்  சரிபார்க்கும் பணியை தொடங்கி வைத்தார். இப்பணியானது தொடர்ந்து அடுத்த மாதம்  (அக்.15ம்தேதி) வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி  இப்பணிகள் விடுமுறை நாட்களை தவிர்த்து அனைத்து அரசு வேலை நாட்களில்  நடைபெற்று வருகின்றன. தேர்தல் துறை பொது சேவை மையத்தில் வாக்காளர்  பட்டியலில் சரிபார்க்க ரூ.1, சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கல்  விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ரூ.1, பிழையை திருத்தி பதிவேற்றம்  செய்ய ரூ.1, ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவு செய்ய ரூ.2 கட்டணமாக பெறப்பட்டு  வருகின்றன. வாக்காளர்கள் பதிவு செய்த விபரங்களை ஓட்டுச்சாவடி  அதிகாரிகள் அவற்றை கள ஆய்வு செய்து சரி பார்த்தபின் வாக்காளர் பட்டியலில்  சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. பிழைகள் இருந்தால்  அவற்றை செயலி மூலம் திருத்தவும், புதிய மற்றும் விடுபட்ட வாக்காளர்களை  இணைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய செயல் திட்டம்  தொடர்பாக வாக்காளர்களுக்கு சமூக வலைதளம், குறுந்தகவல் உள்ளிட்டவை மூலமாக  விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கிராமப்புற மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத  சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது வரை மிக குறைந்த எண்ணிக்கையிலான  விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாக தெரிகிறது.

 புதிய இளம் வாக்காளர்கள்  மட்டுமே ஆர்வமுடன் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். நெட்வொர்க் குறைபாடு உள்ளிட்ட சில பிரச்னைகளால் புதிய  செயலி திட்டம் மந்த கதியில் நடந்து வருகிறது இன்னும் ஒரு மாதம்  அவகாசம் இருப்பதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை போகபோக அதிகரிக்க வாய்ப்பு  உள்ளதாக மாநில தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விரைவில்  வாக்குச்சாவடி அதிகாரிகளை அழைத்து இந்த திட்டத்திற்கு மக்களிடம் உள்ள  வரவேற்பு குறித்து கருத்துக்களை கேட்டறிந்து நிறை, குறைகளை சரிசெய்ய  திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்களுடன் விரைவில் ஆலோசிக்க உள்ளதாக  தெரிகிறது.

Related Stories: