சண்டே மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்களும் வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்

புதுச்சேரி, செப். 5: புதுச்சேரி சட்டசபையில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், நகரபகுதி முழுவதும் சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அப்பணி செய்யும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பின்மை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசும்போது, நகரபகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு அத்துமீறல்கள் நடக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையுள்ளது. ஆகையால் அரசு இதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு முதல்வர் நாராயணசாமி பதில் அளித்து பேசியதாவது: 2வது முறையாக அன்பழகன் நல்ல கருத்தை கூறியிருக்கிறார். புதுச்சேரி நகரப்பகுதியில் சனி, ஞாயிறு மட்டும் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. அரியாங்குப்பம், மூலகுளம், மேட்டுப்பாளையம், காலாப்பட்டு ஆகிய இடங்களில் இருந்து புதுச்சேரி நகரபகுதிக்கு செல்லும் சாலைகளில் காலை, மாலையில் நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மாணவர்கள், தனியார், அரசு ஊழியர்கள் செல்வது தான் இதற்கு காரணம்.

 ஒரு பக்கம், பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். மறுபக்கம், சாலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு. ஒருசமயம், 100 அடி ரோடு என்டி மகால் எதிரே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற நான், காரில் இருந்து இறங்கி சென்று, மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டேன். அதேநேரம், நகராட்சியிடம் உரிய வணிக உரிமம் பெற்ற கடைகளை அகற்றக்கூடாது. இடத்தை ஆக்கிரமித்து தற்காலிக போர்டு வைப்பவர்களை அகற்ற வேண்டும். இதற்கு மக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழ்நாட்டில் ஹெல்மெட் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரியில் வாகன ஓட்டிகளிடம் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு அமல்படுத்தலாம் என கூறியிருந்தேன். ஆனால், ஹெல்மெட் சட்டத்துக்கு நான் எதிராக  இருப்பதாக கூறி என் மீதே ஐகோர்ட்டில் வழக்கு போடுகின்றனர்.

காந்தி வீதி, நேரு வீதியில் அங்குள்ள கடைக்காரர்களே தங்களது சொந்த வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வாகனங்கள் விட இடம் கிடைப்பதில்லை. நகரில் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். சண்டே மார்க்கெட்டால் அரசுக்கு, நகராட்சிக்கு வருமானம் இல்லை. ஆனால், அதிதீ ஓட்டல் முதல் ரயில் நிலையம் வரையில் காந்தி வீதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் வைக்கப்படுகிறது. கடை வைப்பவர்களும், பொருட்களை வாங்குபவர்களும் வெளிமாநிலத்தினர் தான். ஆனால், காந்தி வீதியில் நிரந்தரமாக கடை வைத்துள்ளவர்கள், ஞாயிறன்று மூடும் நிலையுள்ளது. இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் பெரிய அளவில் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகையால், சண்டே மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறினார். அமைச்சர் கமலக்கண்ணன் பேசும்போது, பட்ஜெட்டில் 44 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் மொத்தம் 28 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர். ஒவ்வொரு அரசு ஊழியரும் ஒரு கி.மீ சாலையை தத்தெடுக்க வேண்டும். சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதுபற்றி தெரிவிக்க வேண்டும். இதுபோன்று செய்தால் சிறப்பாக இருக்கும். இதனை எனது யோசனையாக தெரிவிக்கிறேன்.

Related Stories: