நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணாவிடில் நடவடிக்கை நில அளவைத்துறையினருக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி, ஆக.21: திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக, ஆர்டிஓக்கள், தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் ஆகிய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் பட்டா மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது தாசில்தார்கள் உடனடியாக பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். நிலஅளவை துறையில் மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் நிலஅளவை தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி 30 நாட்களுக்குள் உரிய தீர்வு காண வேண்டும். குறிப்பாக, மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய தாலுகாக்களில் நிலஅளவை தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் நிலுவை இல்லாமல் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மற்ற 9 தாலுகாக்களிலும் நிலஅளவை துறையில் அதிக அளவில் மனுக்கள் நிலுவையில் உள்ளது. அடுத்து வருகின்ற ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் நிலஅளவை பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ஒருமாத காலத்திற்குள் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும். பட்டா மாற்றம் வேண்டி ஆன்லைனில் வரப்பெற்ற மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். ஆர்டிஓ அலுவலகங்களில் எஸ்.சி, எஸ்.டி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் மீது ஆர்டிஓ தனி கவனம் செலுத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ரங்கம் சார் ஆட்சியர் சிபி.ஆதித்யா செந்தில் குமார், ஆர்டிஓக்கள் திருச்சி அன்பழகன், முசிறி ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: