உயிர்ப்பலி வாங்கும் மின் வயர்கள்

சிவகங்கை, ஆக.22: சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் வயர்கள், மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றாமல் மின்வாரியம் அலட்சியம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் அதிகமான கிராமங்களை கொண்ட பகுதியாகும். ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல பல்வேறு கிராமங்களின் வயல் பகுதிகள், காட்டுப்பகுதிகளை கடந்தே மின் வயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு வயல் மற்றும் காட்டுப்பகுதிகளில் செல்லும் மின் வயர்களை மின் ஊழியர்கள் யாரும் கண்டுகொள்வது கிடையாது. இவைகள் ஏராளமான இடங்களில் கைகளால் தொட்டு விடும் உயரத்தில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதில் ஏராளமான வயர்கள் நீண்ட நாட்களாக பராமரிப்பு செய்யாமல் அறுந்து விழுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இதுபோல் கிராமப்பகுதிகளில் உள்ள ஏராளமான மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. மின்சார வாரியத்தில் ஆரம்ப காலங்களில் இரும்பினால் ஆன மின்கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்வாரியத்தால் சிமெண்டால் செய்யப்பட்ட கான்கிரீட் மின்கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்கம்பங்கள் பயன்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அதிலுள்ள சிமெண்ட் உதிர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் நிலையிலோ அல்லது கம்பத்தின் முழுப்பகுதியும் விரிசலடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. மின் கம்பங்களை பராமரிப்பதோ அல்லது சேதமடைந்தால் உடனடியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளோ எடுப்பதில்லை. மின்வாரியத்தின் அலட்சியத்தால் கால்நடைகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் ஆக.19அன்று மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின் வயரால் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். கொட்டகுடி கிராமத்தில் கடந்த மே மாதம் பள்ளி மாணவர் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து படுகாயமடைந்தார். பல இடங்களில் பொதுமக்கள் மின் கம்பங்கள், மின் வயர்கள் குறித்து புகார் தெரிவித்தாலும் மாதக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் செய்வதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

பொதுமக்கள் கூறியதாவது, நகர்ப்புறங்களில் மட்டுமே பழைய சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் வைக்கப்படுகிறது. கிராமங்கள், வயல்வெளிகளில் உள்ள மின் கம்பங்கள் கடுமையான சேதமடைந்திருந்தாலும் அவைகளுக்கு பதில் புதிய கம்பங்கள் பொருத்தப்படுவதில்லை. இதுபோன்ற இடங்களில் மின்கம்பிகளும் மிகவும் தாழ்வாக செல்கிறது. காற்று பலமாக வீசும் நேரத்திலும், மழை காலங்களிலும் மின்கம்பம், மின்வயர்கள் உள்ள பகுதிகளில் அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது. புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தொடர் உயிர்ப்பலி ஏற்படாமல் மின் சாதனங்களை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: