ஒட்டன்சத்திரம் டாஸ்மாக்கில் ‘ஓவர் ரேட்’

ஒட்டன்சத்திரம், ஆக. 22: ஒட்டன்சத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றதை கண்டித்து மதுப்பிரியர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டன்சத்திரம்- பழநி சாலையில் அரசு மதுபானக்கடை (எண் 3175) உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கடைக்கு மதுப்பிரியர்கள் மது வாங்க சென்றனர். அப்போது அரசு நிர்ணயம் செய்த விலையை விட ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக விற்றதாக தெரிகிறது. இதனால் மதுப்பிரியர்கள் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானத்தை விற்க கூறி  ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்கள், நாங்கள் சொல்வதுதான் விலை, இஷ்டம் இருந்தால் வாங்குங்கள், இல்லையென்றால் செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் தொடர்ந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து மதுப்பிரியர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து மதுப்பிரியர்கள் கூறுகையில், ‘கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் உடல் அசதிக்காக மதுபானங்களை வாங்கி அருந்துவோம். ஆனால் இக்கடையில் அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். இதுபற்றி மேல் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏன் விலை அதிகம் வைத்து விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டால் தகாத வார்த்தைகளில் திட்டுகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: